இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் பலாலி விமான நிலையம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார் விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
மேலும், மட்டக்களப்பு, திருகோணமலை, மத்தள, கட்டுநாயக்க உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala De Silva தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகள் அதிகரித்துள்ளன.
சைனா ஈஸ்டன் எயார் முன்னர் ஒரு வாரத்திற்கு ஒரு விமான சேவையையே நடத்தியது. அது தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று 14 ஆக இருந்த எமிரேட்ஸ் எயார்லைன் விமான சேவை 28 ஆகவும் நான்காக இருந்த எத்தியான் விமான சேவை ஆறாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் 21 ஆக இருந்த கட்டார் விமான சேவை தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. எயார் அரேபியா ஏழு விமான சேவைகளை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது.
எயார் ஏசியா 7 சேவைகளை தற்போது பதினொன்றாக அதிகரித்துள்ளது. அதே போன்று ஏர் இந்தியா 16 சேவைகளை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது.
அவை தவிர்ந்த மேலும் பல விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இது ஒரு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன் அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்க முடியும்.
அதே வேளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பலாலி விமான நிலைய ஓடு பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதேபோன்று கராச்சி நேபாளம், கொங்கோ இராச்சியம் ஆகியவற்றுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறான உள்நாட்டு விமான சேவைகள் மூலம் நாட்டுக்கு வருகை தருகின்ற உல்லாசப் பிரயாணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தேசிய ரீதியிலான வர்த்தகர்கள் சிறந்த பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.