மன்னார் நகர் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், மதவழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலய வீதியில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்துமாறு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் தயாளராஜன் தலைமையில் மன்னார் நகரினுள் புதிதாக அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை 8.30 மணியளவில் மன்னார் நகரில் இடம்பெற்றது.
அமரர் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உருவச்சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டமானது, மன்னார் நகர் பிரதான சுற்றுவட்டத்தினூடாக, மாவட்டச் செயலகம் மற்றும்பிரதேச செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கான மகஜர் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல்லிடமும் பிரதேச செயலாளர் ம.பிரதீபிடமும் கையளிக்கப்பட்டன.
நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தார்கள்.
அதில், மரணத்தை முன்னிலைப்படுத்தும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்காதே’ புதிய மதுபானசாலையினால் ‘சமூகச்சீர்கேடு உருவாக வழிவகுக்காதே’ போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
மேலும், கையளிக்கப்பட்டிருந்த மகஜரில் மன்னார் நகர் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் மதவழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள பகுதியிலும் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதால் மாணவர்கள் இளைஞர்கள் நலன்கருதி இவற்றை உடன் தடைசெய்யுமாறும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இப்போராட்டத்தில் மன்னார் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.