சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் என்ற மாணவனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்களவை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,
ஈழத்தமிழர்களின் கல்விப் பொக்கிசமாக விளங்கிய யாழ்ப்பாண நூல் நிலையத்தை சிங்கள அரசு திட்டமிட்டு, அழித்து, தமிழர்களின் அறிவுப் பசியையும், அடையாளத்தையும் நீர்த்துப்போக வைக்கலாம் என்று எண்ணி 97000 இற்கு மேற்பட்ட நூல்களையும், கையேடுகளையும் எரித்து சாம்பலாக்கினர்.
நூல் நிலையம் எரித்து 42 வருடங்கள் கடந்தும், ஈழத்தமிழரது அறிவுப்பசியை அழிக்க முடியாது என்பதற்கு விஜேந்திரகுமார் அர்ச்சிகன் ஒரு முன்னுதாரணம் ஆவார்.
இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சங்கம் (National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள டெஸ்ரா மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இடம்பெற்ற அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருந்ததுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இன்று சாதனை மாணவனாக பாராட்டுப் பெறும் அர்ச்சிகன் தாயகத்திலிருந்து, தனது பெற்றோரோடு அனைத்தையும் இழந்து, வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.
இம் மாணவனின் சாதனை எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.