வயோதிபரின் சில்லறைக் கடையில் கொள்ளையர்கள் கைவரிசை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச் சென்றுள்ளனர்.

கடையில் கிடைக்கின்ற வருமானத்திலேயே தனது குடும்பத்தை ஓட்டிச்சென்ற வயோதிபர் நிர்க்கதியான நிலையிலுள்ளார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை இரவு வரை நாடாளுமன்றத்தை நடாத்த தீர்மானம்!

இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் நியமனம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை 07 சந்தர்ப்பங்களில் பல்வேறு முன்மொழிவுகள் மூலம் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் 150,000 இற்கும் அதிகமானவர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் திறன் மற்றும் தொழிற் தகைமைகள் தொடர்பான சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆரம்ப உள்ளகப் பயிற்சிகள் சரியான வகையில் வழங்கப்படாமையாலும், முறைசார்ந்த வகையில் அப்பதவிகளுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படாமையாலும் குறித்த அலுவலர்களுக்கு எதிர்பார்க்கப்படும் செயலாற்றுகையை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 15,800 இற்கும் அதிகமானவர்கள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தற்போது பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

கனடாவில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது குற்றச்சாட்டு !

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் அறை ஒன்றில் தங்கி இருந்த சிலர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்தவர்கள் மீது இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

கொன்ஸ்டபில் பிரிட்ஜெட் மோர்லா என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இந்த பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீது விவாதம்!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

இதேவேளை, 10வது பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது.

நுவரெலியாவில் 08 வெளிநாட்டவர்கள் கைது!

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இருந்து யாழ் வந்து தனது தாயை கடுமையாக தாக்கிய மகள்!

கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் 43 குடும்பப் பெண் ஒருவர் யாழிற்கு வந்து தனது 69 வயதான தாயாரை தும்புத்தடி மற்றும் செருப்பால் கடுமையான தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கனடா வாழ் குடும்பப் பெண்ணின் சகோதரி பொலிஸாரிம் முறைப்பாடு அளித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது கணவனையும் 16 வயது மற்றும் 13 வயதான மகன்களையும் கைவிட்டு விட்டு கனடாவில் 35 வயதான இன்னொரு குடும்பஸ்தருடன் குறித்த குடும்பப் பெண் தற்போது வாழ்ந்து வருகின்றார்.

இச்செயலால் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த பெண்ணின் தாயார் கடும் கோபத்துடன் இருந்துள்ளார்.

கனடாவில் கணவனை கைவிட்டு இன்னொருவருடன் வாழ்ந்து வரும் தனது மகளுக்கு பாடம் கற்பிக்க தாயார் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணுக்கு கொடுக்க நினைத்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை யாழ்ப்பாணத்தில் தன்னுடன் வாழும் தனது இரண்டாவது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள கடைத்தொகுதியுடன் கூடிய 3 பரப்பு காணி மற்றும் வலிவடக்குப் பகுதியில் உள்ள 30 பரப்புக் காணி என்பவற்றையே தனது இரண்டாவது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

மேலும், யாழ் நகரப்பகுதியில் உள்ள காணியில் கட்டப்பட்ட கடைத் தொகுதி கனடாவிலிருந்து குடும்பப் பெண் அனுப்பிய காசிலேயே கட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய ராசிபலன்கள் 03.12.2024

மேஷம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதாக திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள்விலகும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.

மீனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். புதுவேலை கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

வவுனியா கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

வவுனியா (Vavuniya), சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் நேற்று (01) மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை ஒன்றின் காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு வவுனியாவிலிருந்து இளமருதங்குளம் பகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூமாங்குளத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(01.12.2024) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இதன்படி சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.