டுபாயில் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனின் சடலம் நாட்டை வந்தடைந்தது!

டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 26 வயதான கமலதாஷ் நிலக்சன்  என்ற இளைஞனின் உடலம், நேற்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் கடந்த 27.04.2023 அன்று இடம்பெற்றுள்ளது.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வேலைவாய்ப்பிற்காக துபாய்க்கு சென்று நிலையிலேயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை, இது ஒரு தற்கொலை என அந்நாட்டு மருத்துவர்களால் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சடலத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்தவேளை, விமான நிலையத்தில் வைத்து பரிசோதித்த பொலிஸாரும் மருத்துவர்களும் இது ஒரு கொலை என்றும், சடலத்தை உடனடியாக வழங்க முடியாது என்றும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதேவேளை, தாயாரின் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் சடலமானது நேற்றையதினம் சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் இன்றையதினம் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.

இந்த சம்பவமானது அவருடன் துபாயில் பணிசெய்த நண்பர்கள் உட்பட அவரது ஊரில் உள்ள அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இன்றைய ராசிபலன்27.05.2023

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். ஆனால், பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியம் அனுகூலமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள் ளது. உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தங்கத்தின் விலையில் இறக்கம்

  மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னையில்    தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,605 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் 4,591 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,728 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அபுதாபியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு!

  ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

 6 பேர் உயிரிழப்பு 

குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேவெளை அபுதாபி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாடு தகவல்கள் ,கூறுகின்றன. 

சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திடீரென வரும் கொள்ளையர்கள்

இந்த கொள்ளையர்களிடம் அதிகளவான தமிழர்கள் சிக்கிய நிலையில் தமது உயிரை பாதுகாக்க அவர்கள் பெருமளவு தங்கத்தை இழந்துள்ளனர்.

அந்த வகையில் சொலத்தூண் பிரதான புகையிரத நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஈழத்தமிழருக்கு அருகில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த காலணியை பார்க்குமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பி அவர் குனிந்து காலலணியைப் பார்க்கும் நொடிப்பொழுதில் அவர் கழுத்தில் ஒருவர் கையால் இடிக்க மற்றவர் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர். அதேபோன்று கெர்லபிங்கன் லிடெல் கடைக்கு 16 வயதான மகனோடு ஈழத்தை சேர்ந்த தாய் ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த தாய் கடைக்குள் வேறு பக்கம் பொருட்களைப்பார்த்துக் கொண்டு நிற்க மகனின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைக் கண்ட ஒருவர் கைகளால் மகனை இடித்துவிட்டு அவர் நிலைதடுமாறும் நேரத்தில் சங்கிலியை அறுத்துள்ளனர்.

எனினும் சங்கிலியில் அம்மனின் டொலர் கிடந்ததால் அறுந்த சங்கிலி அந்த நூலில் சிக்கி கொள்ளையர்களுகு்கு கிட்டவில்லை.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை

அதேபோன்று, பாசல் நகரில் தங்க நகைகளை அணிந்து சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேறு மாநிலத்தில் இருந்து வந்த இருவர் வாகனத்தில் இருக்கும்போது கண்ணாடியைத்தட்டி ஒரு வெள்ளைக் காகிதத்தில் முகவரி கேட்டுள்ளனர்.

அந்த இடைவெளியில் மற்றுமொருவர் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்தெடுக்க முயற்சித்த எடுத்த வேளையில் அவரது தங்கச்சங்கிலி மொத்தமாக இருந்ததால் கழுத்தும் அறுபட்டு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் சுவிஸ் நாட்டில் விசாவின்றி வீடொன்றில் தங்கியிருந்த ஆர்மேனியர்கள் பலரை பொலிஸார் கண்டுபிடித்து அனைவரையும் கூண்டோடு கைது செய்துள்ளனர் .

இவர்கள் களவு செய்வதில் கைதேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. தமிழர்கள் எங்கெல்லாம் தங்கம் பணம் முதலியவற்றை மறைது வைப்பதை எளிதில் கண்டுபிடித்து ஒலியெழுப்பும் கருவிகளும் அவர்களிடம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே இது தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சஜித் மற்றும் சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (26) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்

யாழ்.தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் மாணவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் வீட்டில் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன நோயால் பாதிக்கப்பட்டவர்
சமபவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவனின் தந்தையார் தெரிவிக்கையில், தனது மகனை என்ன காரணத்துக்காக குறித்த ஆசிரியர் அழைத்தார் என தனது மகனுக்கு தெரியாது எனவும், ஆசிரியர் திடீரென கைகளால் முகம் தலைப் பகுதிகளை தாக்கியதாக தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஆசிரியர் மன நோயால் பாதிக்கப்பட்டவர் என தான் அறிந்ததாகவும் இவ்வாறான ஆசிரியரை பாடசாலையில் வைத்திருப்பது ஏனைய மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் .

எனவே மனநோய் உள்ள ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ் பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்த கொத்துரொட்டி வித்தமைக்கு  45,000 ரூபாய் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாண – ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக கடந்த 09ம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்தது.

 45,000 ரூபாய் தண்டம் 

குறித்த உணவகத்தில் பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பு.ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் (26) வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000 ரூபாய் தண்டம் விதித்தது.

அத்துடன் கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (26-05-2023) முதல் ஜூன் மாதம் 12-06-2023 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளமை காரணமாக இவ்வாறு நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29-05-2023ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08-06-2023 ஆம் திகதி வரை இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.