இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையை ஏற்க்க தயார் -சீ.வீ.கே.சிவஞானம்

  அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைமை தொடர்பாக ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை

நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை. முரண்பாடு இல்லாத நிலையேற்பட்டு அனைவரும் ஏக மனதாக தெரிவு செய்வார்களாக இருந்தால் போட்டியில்லாது அனைவரதும் ஒத்துழைப்போடு இணக்கப்பாட்டோடும் தெரிவு செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.

ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால் நான் அந்த கடமையினை செய்யக்கூடிய ஆற்றல் பொறுப்பு எனக்குள்ளது என்றார்.

அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்து பதவிக்கு வர விரும்பவில்லை என கூறிய அவர், தலைமைக்கு தகுதியுடையவர் என என்னை பலர் கேட்கின்றார்கள், சொல்லுகின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும் என்றார்.  

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நால்வர் கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகின்றது.

முகமட் அஸ்வர், முகமட் அனாஸ், முகமட் ஹபீர் ஜபீர், முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமண நிகழ்வில் பட்டாசு கொளுத்த சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பூ வெடி பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியின் போது பட்டாசு ஒன்று வெடிக்காததால் மீண்டும் அதனை பற்றவைக்க முயன்றபோது ​​பட்டாசு தீப்பிடித்து அவரது தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்

இதில் பலத்த காயமடைந்த 31 வயதுடைய நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் காவலில் இருந்த பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

  பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தமை தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர்  முன்னதாக,  பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 மேலும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தாடியால் பறிபோன மாணவனின் கை!

மாத்தறையில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காத்தாடி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாக சென்றதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, வேரகம்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் மாணவனை வாளால் தாக்கியதாகவும் மாணவனின் வலது கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பாடசாலை மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு!

நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் சொக்லேட்களை இறக்குமதி செய்து அதனை விநியோகித்திருந்த வீடொன்று சோதனையிட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகளுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்ட புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரி கோசல ரங்கநாத் தலைமையில் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதுடன் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலாப்பழத்தால் நிகழ்ந்த கொலை சம்பவம்!

கொழும்பில் ஹோட்டலொன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கல்கிஸ்சை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி சந்தேக நபர் ஹோட்டல் உரிமையாளரிடம் பலாப்பழமொன்றை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளார்.

அதன் விலையை 250 ரூபாவை என தெரிவித்த நிலையில் அதனை 200 ரூபாவுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர் பேரம் பேசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்தே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் ரத்மலான பகுதியில் வைத்து நேற்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுப்பம் எண்ணெயில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர்.

நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு.

இலுப்பை எண்ணெய் 

இறைவனுக்கு எத்தனையோ விதமான பொருட்களால் பூஜை, அபிஷேக, ஆராதனைகள் செய்கிறோம். அன்புடனும், பக்தியுடனும் செய்யும் அத்தனையையும் இறைவன் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சில பொருட்கள் மட்டும் அதிகசக்தி வாய்ந்ததாகவும், சில தெய்வங்களுக்கும் மிகவும் பிரியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. 

விளக்கேற்றுவதற்கும் பலவிதமான எண்ணெய்கள், பல கூட்டு எண்ணெய் ஆகியன பயன்படுத்தப்பட்டாலும் இவற்றில் மற்ற எண்ணெய்களை விட இலுப்பை எண்ணெய்யே விளக்கேற்ற மிகவும் சிறந்தது என சொல்லப்படுகிறது. இலுப்பை எண்ணெய்யானது இலுப்பை மரத்தின் வித்துக்களின் இருந்து பெறப்படுகிறது.

இலுப்பை எண்ணெய்யின் சிறப்புகள்

மருத்துவ ரீதியாக இந்த எண்ணெய் பூச்சிக்கடி, விஷக்கடி, கடும் இடுப்பு பலி ஆகியவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும். இந்த எண்ணெய்யை லேசாக சூடேற்றி தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும். ஆன்மிக ரீதியாக பார்த்தால் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் எண்ணெய்யாக இலுப்பை எண்ணெய் உள்ளது.

இலுப்பை எண்ணெய் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அனைத்து தெய்வங்களுக்கும் விளக்கேற்ற உகந்த எண்ணெய்யாகும். சிவனுக்கு மிகவும் பிரியமான எண்ணெய் இலுப்பை எண்ணெய் என்று கூறப்படுகிறது.

வீடுகளில் இலுப்பை எண்ணெய் தீபம்

கோவில்களில் விளக்கேற்றும் போது இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. இந்த எண்ணெய்யால் விளக்கேற்றி எந்த தெய்வத்தை வழிபட்டாலும், என்ன நினைத்து வழிபடுகிறோமோ அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது ஆன்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

வீடுகளில் இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றும் போது பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04.30 மணி துவங்கி 6 மணி வரையிலான நேரத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலனை தரும். அந்த நேரம் தான் இறைவனும், இறைவியும் நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.

அந்த நேரத்தில் இலுப்பை எண்ணெய்யால் விளக்கேற்றினால் வேண்டுதல் அப்படியே நிறைவேறும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

மங்களங்கள் பெருகும்

வெள்ளை பஞ்சு திரியில் மஞ்சளை தேய்த்து, உலற வைத்து மஞ்சள் திரியாகவும் ஏற்றலாம். சிவப்பு நிற திரியால் விளக்கேற்றினால் வறுமை, கடன், பல விதமான தோஷங்கள் நீங்கும். பொதுவாக விளக்குகளை நெய் கொண்டு ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பார்கள்.

ஆனால் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவதன் பலனை ஒரே ஒரு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடும் போது பெற்று விடலாம். இலுப்பை எண்ணெய்க்கு அந்த அளவிற்கு தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.

யாழில் வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார்.

இச்சம்பவத்தில், 65 வயதான உத்தரவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி!

முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், “முதலீட்டு சபை கஞ்சா பயிர்செய்கையை ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குகிறது.

அதற்கான முதலீட்டாளர்களை தேடி வருகிறோம். சமீபத்தில் வெளியான நிபுணர் குழு அறிக்கையில் முதலீட்டு சபையின் கீழ் முன்னோடி திட்டம் ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் சோதனையை தொடங்குவோம். அதற்கு நாம் ஒரு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் அது ஒரு வலயமாக இருக்ககூடும்.

அதிக அன்னியச் செலாவணியைக் கொண்டுவரும் சில முதலீட்டாளர்களுடன் இதைத் தொடங்க உத்தேசித்துள்ளோம். அவர்கள் கஞ்சாவை வளர்ப்பது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச தயாரிப்புகளையும் செயலாக்க வேண்டும்.

அதுதான் நாட்டின் வருமானம்.அதை செயற்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஏனெனில் சட்டம் இயற்றப்பட்டவுடன், சர்ச்சைகள் இருக்கக்கூடாது. குழு அறிக்கையின்படி, அதை எப்படி செயற்படுத்துவது என்பது குறித்து எமக்கு அமைச்சரவை பத்திரம் தேவை.” என்றார்.