பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஒருவரை ஏமாற்றி இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சந்தேகநபர்  மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 22 வயதான திகன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்https://youtu.be/aK83Uc1Wj1w?si=LVL71Uph-QW3D2SL

சமூக வலைத்தளங்களில் வேலைவாங்கி தருவதாக மோசடி!

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  இலங்கை  கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

வேலை அல்லது வேறு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் இரகசிய தகவல் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்படாத அணுகல்

இந்தநிலையில், இதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல் தொடர்பாக கடந்த வாரம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைந்து பெரும்பாலும் நிதி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும்  இதுபோன்ற சுமார் 74 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளியாகும்!

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களைப் போல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு கோரப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த கனடாவாழ் ஈழத் தமிழர்

கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர்.

கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்வதுடன், அங்கு பல்வேறு அரசியல் களங்களிலும் கால் பதித்துள்ளனர்.

இதன் காரணமாக கனடாவிலும், சர்வதேச ரீதியிலும் அங்கு வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில், கனடாவின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி தமிழர்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணையானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்

நாட்டில் மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது!

இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்த தடையும் இல்லையென்றாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பரவலாகப் பேசப்படும் பல தலைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய ஜனாதிபதி, தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்தும் ஊடகப் பிரதானிகளுக்கு விளக்கமளித்தார்.

இலங்கை ஒலிபரப்பாளர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொது முகாமையாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றில் வரவேற்க்கப்பட்ட அர்ச்சுனாவின் செயற்பாடு!

கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வரவேற்றுள்ளார்.

நாடாளுமன்ற இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததால் பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன்கள் 06.12.2024

மேஷம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்

சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

திடீர் பயணங்கள் இருக்கும். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்

எதார்த்தமாக பேசிக்கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

பாரிய அளவில் உயர்வடைந்த தேங்காய் விலை!

இலங்கையில் பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளம்ை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கிராமப்புறங்களிலும் ஒரு தேங்காய் 160 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் தேங்காய் போதிய கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதேவேளை கொழும்பின் சில பிரதேசங்களில் தேங்காய் பாதி ஒன்று 100-120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலை தொடர்ந்து உயரும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் உண்வுப்பொருகளில் தேங்காயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பிணையில் விடுதலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி ராஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்றைய தினம் (05.12.2024) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

மிரிஹான காவல்துறை
குறித்த காரை லொஹான் ரத்வத்த, பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி, மிரிஹான காவல்துறையினரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவ்வாறானதொரு பின்னணியில், ரத்வத்தவின் மனைவியான ராஷி பிரபா ரத்வத்தேயும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் (Nugegoda Magistrate’s Court) இன்று பிணை வழங்கியுள்ளது.