மாவீரர் துயிலமில்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு!

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (22) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் சிரமதான பணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.

இதன் போது மாவீரர் நாள் தொடர்பாக சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

வெளிநாட்டில் இருந்து வந்த பெண் கைது!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான இந்தோனேசிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கைது

இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்தப் பெண் ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் மறைத்து வைத்து 4598 கிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார் .

நேற்று மதியம் 04.10 மணியளவில் QR 654 என்ற Qatar Airways விமானத்தில் அவர் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலித்கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம்

இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித்கொத்தலாவலயின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர் பிரேதபரிசோதனை இடம்பெறவேண்டும் என நீதிமன்றத்திடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

லலித்கொத்தலாவலயின் மரணம் தொடர்பில் பிரதேச பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை குடும்ப உறுப்பினர்கள் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் முன்வைத்தனர்.

லலித்கொத்தலாவலையின் மரணம் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்றுள்ளது என சட்டத்தரணிகள் மூலம் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்துவருடங்களாக ஒருகுழுவினரால் லலித்கொத்தலாவல பணயக்கைதிபோல வைக்கப்பட்டிருந்தார் அவரை குடும்ப உறவினர்கள் பார்வையிடுவதற்கு கூட அனுமதிவழங்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோள்களை ஆராய்ந்த நீதவான் லலித்கொத்தலாவலயின் உடலை பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும்  24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும்  தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மண்மேடு சரிந்ததில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (22) இரவு, வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்தார்.

சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய ராசிபலன்23.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

யாழில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்

விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கிக் கொண்ட பலர் உள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டுச் செயலிகளில் இணைந்து கொள்வோர் அங்கு ஒரு சிலரைக் கொண்ட குழுவாக்கப்படுகின்றனர்.

அதில் இணையும்போது ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குக்கு வழங்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றனர். அந்த குழுவில் அதிகளவானோர் இருப்பதாகவும் காட்டும்.

அதன்பின்னர் விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின்போதும் ஒரு தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டும். அதில் சிறு தொகை உடனடியாகவே மீளவும் விளையோடுவோரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தொடக்கத்திலே விளையாடுபவர் முதலில் வெற்றி பெறுவார்.

அதனால் ஏற்படும் நம்பிக்கையால் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தி விளையாடத் தூண்டப்படுகின்றனர். விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின்போதும் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துச் செல்லும்.

இது இலட்சங்களை எட்டும்போதும் கணக்கில் சிறியளவு தொகை வரவு வைக்கப்படும். உதாரணமாக 40 இலட்சம் ரூபா ஒருவர் செலுத்தினால் அவரது கணக்கில் சில லட்சங்கள் உடனடியாக வரவு வைக்கப்படும்.

விளையாட்டில் வெற்றிபெற்றால் வெற்றித் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும். பெருந்தொகையை வைப்பிலிடும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் படிமுறைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டுக் குழுவில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

இதை நம்பிப் பெருந்தொகையான பணத்தைச் செலுத்தும் பலர் பணத்தை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக எவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அந்தக் குழுவில் உள்ளவர்களிடையே பணம் பரிமாற்றப்பட்டு, ஒரு சங்கிலித் தொடராக இது மேற்கொள்வதால் இறுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்வது யார் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது.

ஆகையால் இவ்வாறான விளையாட்டுச் செயலிகள் மூலம் நடக்கும் பண மோசடி தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தப் பண மோசடியில் சிக்கிய பலர் உள்ளபோதும் அவர்களால் முறைப்பாடு செய்ய முடிவதில்லை. யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது என்ற சிக்கலாலேயே பலர் இது தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர்.

பல்வேறு தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்தலின் பின்னணியில் இவ்வாறான மோசடிகளும் உள்ளன. இவ்வாறான செயலிகளை மக்கள் உபயோகப்படுத்தாது தவிர்த்தலே புத்திசாலித்தமானது என்றும் தெரிவித்தார்.

தண்ணீரால் அவதியுறும் யுவதி!

  அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்தவர் டெஸ்ஸா ஹன்சன்  எனும்  25 வயதுடைய  பெண்  சமீபத்தில் தனக்கு இருக்கும் தண்ணீர் அலர்ஜி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தண்ணீர் பட்டாலே இவர் உடம்பில் ஹைவ்ஸ் என்று கூறப்படும் ரேஷஸ், அலர்ஜி போன்ற சருமம் தடித்துவிடும் என்பதை தெரிவித்திருக்கிறார். மருத்துவ ரீதியாக இதன் பெயர் அக்வாஜெனிக் யூர்டிகார்சியா என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதுமே தோராயமாக 100 – 250 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. லேசாக தண்ணீர் பட்டாலோ அல்லது மழைச்சாரல் உங்கள் மீது பட்டாலும் சருமம் சிவந்து விடும், அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தடிக்கத் துவங்கும்.

முதல் முதலாக இந்த அலர்ஜி 1964ம் ஆண்டு ஒரு நபருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆறு, கடல், மழை என்று நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் மட்டும் இல்லாமல், வியர்வை மற்றும் கண்ணீர் பட்டால் கூட அலர்ஜி ஏற்படும்.

தற்போது 25 வயதாகும் டெஸ்ஸாவுக்கு 8 வயதில் இருந்தே இந்த பிரச்னையோடு வாழ்ந்து வருகிறார். முதல் முதலாக இவருக்கு 8 வயதில் கைகள் மற்றும் தலையில் இந்த அலர்ஜியால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் அப்படியே இருந்தது.

மருத்துவர்கள் டெஸ்ஸா பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்புவினால் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். ஆனால் இந்த அலர்ஜி குறையாமல் நீங்காமல் நீண்ட காலம் நீடித்தது.

பின்னர், இரண்டு ஆண்டுகள் தீவிரமான பரிசோதனைக்குப் பிறகு இவருக்கு தண்ணீர் அலர்ஜி இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார். எவையெல்லாம் அலர்ஜியை அதிகமாக்கும் என்பதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

வளர வளர இவருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கண்களில் எரிச்சல், நாக்கில் புண் மற்றும் வாயைச் சுற்றி கூட ஹைவ்ஸ் போன்ற அறிகுறிகள் தோன்றத் துவங்குமாம்.

அதிக தண்ணீர் இருக்கும் பானங்களை குடித்தால் கூட இவருக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுமாம். எனவே பால் மட்டும் தான் இவருக்கு ஓரளவுக்கு சரியாக கொழுப்பு, புரதம் கொண்டு சரியான அளவில் இருக்கும்.மேலும், ஏற்றுக்கொள்ளத்தக்க உணவாக இருந்து வருகிறது.

அதே போல இவர் நீண்டநேரம் பால் குடிக்காமல் இருந்தால் கூட அதிகமாக தாகம் எடுத்து அதற்கு பதிலாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு வேளை தாகத்தினால் தண்ணீர் குடித்துவிட்டால் தீவிரமான வலி ஏற்பட்டு பலமுறை மயங்கி விழுந்திருக்கிறார்.

மிக மிகக் குறைவான அளவு தண்ணீருடன் இவர் முழுக்க முழுக்க வறண்ட உணவுகளையே சாப்பிட முடியும். திரவ உணவுகளைப் பொறுத்தவரை இவர் பால் அடிப்படையிலான சூப்புகளை மட்டுமே குடித்து வருகிறாராம்.

இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி மோதவுள்ளது.

அதிபர் நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!

அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.