மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில், மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்துவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் குறுகிய அரசியல் நோக்கங்களினால் இந்த நடவடிக்கையை மீளப்பெற முடியாது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணச் சலுகையுடன் வழங்கப்பட்ட 119 உரிமங்களை முறைகேடாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் அண்மையில் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனங்களில் 75% ஒரு நிறுவனத்தினால் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

8 இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை நான்கு படகுகளுடன் கைது செய்தது.

கைதானவர்கள் படகுகளுடன்  மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம்  மரைன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டு மீனவர்களும் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில்  மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடத்தல் தங்கத்தை மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா என்ற கோணத்தில் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

7 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி!

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

 
 எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன்24.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மைத்துனரை கொலை செய்தவர் கைது

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி – குறிஞ்சம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கற்பிட்டி – ஆசிரிகம கத்தோலிக்க தேவாலயத்தின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் நேற்று (22) இரவு சென்றுள்ளதுடன், இரவு உணவிற்காக தனது மனைவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கும் வந்துள்ளார்.

இதன்போது, உயிரிழந்த நபருடைய மனைவியின் மற்றொரு சகோதரன் அந்த இடத்திற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதைத் தீர்க்க முயன்றபோதே மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அவரைக் குத்திக் கொலை செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலையை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபரின் மைத்துனரான 28 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டியில் வர்த்தக பெண் கடத்தல்

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசுக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் ஒருவர் இன்று (23) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.

காரில் வந்த குழு ஒன்றினாலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை குறித்த பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த காரை தடுத்து நிறுத்துமாறு கற்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது,   காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது  கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காரில் இருந்து தப்பிய குறித்த பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து அவர் ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கைது!

அரச வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட குருசெத கடன் திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளிலிருந்து போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொது முறைப்பாடுகள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஒருவர் ஆவார்.

இவர்  இரண்டு வங்கிக் கிளைகளில் இருந்தும் சுமார்  26  போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 42 மில்லியன் 55 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமன்னார் இந்தியா கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்தியா – மன்னார் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நேற்று (22.10.2023) மன்னார் – முசலி தேசிய பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இக்கப்பல் போக்குவரத்து மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும், அத்துடன் சூரிய சக்தியை கொண்டு மன்னாரை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார முன்னேற்றம்
புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ். குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் உள்ளதாகவும் அதன் மையதாக பூநகரி நகரை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்றுவதுடன் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும் போது மன்னாரும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய முடியும்.

அத்துடன் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருந்தில் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பஸ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.