நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

நாம் 200′ நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“நீர்க் கட்டணம் தொடர்பில் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நீர்க் கட்டணம் இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது. கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும்கூட, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துபவர்களுக்கும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின் கட்டண அதிகரிப்பு உட்பட குடிநீர் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பும் கடந்த காலங்களில் நீர்க் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியது. அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“நாம் 200” என்ற நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல்வேறு அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தியாவில் இருந்தும் அதிதிகள் வருகை தரவுள்ளனர். மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதற்கே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாம் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். நாளை அமைச்சரவை உப குழு கூடவுள்ளது. இது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும். இந்த உப குழுவில் எடுக்கப்படும் முடிவின் பிரகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதி இது குறித்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம் காணி உரிமை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும்.

அதேபோன்று, இதுவரை மலையக மக்களின் மேம்பாட்டுக்காக வரவு செலவுத்திட்டத்தில் 3,000 மில்லியன்களே ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் சுமார் 2000-2500 மில்லியன்கள் வீட்டுத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் இந்த வீட்டுத்திட்டங்கள் இலவசமாக மக்களுக்கு கையளிக்கப்படுவதில்லை. இவ்வாறு அமைச்சின் ஊடாக வழங்கப்படும் வீடுகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகையில் 50 % சதவீதத்தை குறித்த மக்கள் அரசாங்கத்துக்கு திருப்பி வழங்கவேண்டியுள்ளது. ஏற்கனவே வறுமையில் இருக்கும் மக்களால் இவ்வாறு வழங்குவது சாத்தியமற்றதாகவே உள்ளது. எனவே எஞ்சிய சுமார் 500 மில்லியன்களை வைத்து மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் கூட இது ஒரு சமூக ரீதியிலான பிரச்சினையாக இருப்பதால், இந்த முறை வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு 15,000 மில்லியன்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். இது ஐந்து மடங்கு அதிகரிப்பாகும். எனவே இவ்வாறு கிடைக்கவிருக்கும் நிதியை முறையாக திட்டமிட்டு சரியான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவோமாயின் நான் இந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் இந்த நிதி இந்த சமூகத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் தொடர்பிலும் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். இந்திய அரசாங்கம் ஏற்கனவே எமக்கு 3,000 மில்லியன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாம் வெறுமனே கண்துடைப்புக்காக செய்யப்படும் மாற்றங்களுக்குப் பதிலாக, நிரந்தர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக அமைச்சின் ஊடாக ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த செயற்குழுவில் அரசியல்வாதிகள் எவரும் அங்கம் வகிக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். மலையகத்தை சேர்ந்த புத்திஜீவிகள் உட்பட பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால் வழங்கப்படும் திட்ட வரைவு எமக்கு கிடைத்தவுடன் அதனை இந்திய அரசாங்கத்துக்கு வழங்குவோம். அதேநேரம் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அதனை வழங்கவுள்ளோம். அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்று அதனை நடைமுறைத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் கல்வி அமைச்சினாலே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், நான் கல்வி அமைச்சருடனும் இது குறித்து கலந்துரையாடியுள்ளேன். அவர் இந்த விடயத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தோட்டத் தொழிலாளர் தொடர்பில் நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். அது மிக முக்கியமானது. அது ஒரு பொறிமுறை ஆகும்.

அதேபோன்று இந்திய வீட்டுத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முன்னர் தோட்டத்தில் தொழில் செய்தால் தான் வீடு என்று இருந்த நிலையை மாற்றி தோட்டத்தில் பிறந்தால் வீடு என்ற விடயத்தைக் கொண்டுவந்துள்ளோம். அடுத்தது, கடந்த காலங்களில் வீட்டுத்திட்டங்கள் வரும்போது குறித்த சில எண்ணிக்கையிலான காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் நாம் இம்முறை ஒரே தடவையில் மொத்தமாக 1,785 காணிகளை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளோம். இதில் முதல் கட்டமாக சுமார் 1,300 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக அமைச்சரவை மூலம் ஒரு குழுவை நியமிக்கவுள்ளோம். அதில் எனது அமைச்சின் செயலாளர் உட்பட மின்சாரம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு அமைச்சுகளின் முக்கியமான அதிகாரிகள் அங்கம் வகிக்கவுள்ளனர். இந்த வீட்டுத்திட்டம் அவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறு செயற்படுத்தப்படும்போது மக்களுக்கு சகல வசதிகளும் ஒரே நேரத்தில் கிடைக்கும். எனவே இவ்விடயம் தொடர்பில் பொறிமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.” என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

காசாவில் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் இளம் பெண் கொலை!

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) உடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம்குடும்ப பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நிகழ்ந்த சோகம்!

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ் சல்லியாவத்தை, பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப் பெண்ணை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்
67வயதான ஜெயேந்திரன் சோதிமலர் எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன்25.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொலிஸாரை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது!

ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்யச் சென்ற போது, ​​சந்தேக நபர்கள் குறித்த அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட மூவர் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சரக்கு ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சுங்கத்தால் வௌியிடப்பட்ட தற்காலிக தரவு அறிக்கையின் படி இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி  11.88 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.94 சதவீதத்தால் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆடைகள் மற்றும் ஜவுளி, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திகள், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகளுக்கான கேள்வி குறைவதால், சரக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் சேவைகள் ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2,304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55.67% வளர்ச்சியாகும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி சேவைகள் தகவல் தொழில்நுட்பம்/ வர்த்தக செயல்முறை முகாமைத்துவம் (ICT/BPM), கட்டுமானம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் வணிகச் சேவைகளை உள்ளடக்கியதாகும்.

ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலச் சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, ​​பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செவிலியர்கள் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

அரச தாதியர் சேவையில்  தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ள அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை!

பூகொட மண்டாவல பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளின் போது சந்தேகநபரின் சடலம் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மண்டாவல பகுதியைச் சேர்ந்த 46  மற்றும் 54 வயதுடைய மனைவி மற்றும் கணவன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.