இன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.

இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் போட்டித் தொடரில் முன்னேறுவதற்கு முக்கியமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோமாளிகளின் கூடாரம் இலங்கை பாராளுமன்றம்

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இலங்கையில் தற்பொழுது அதிகமானவர்கள் ஒருவேளை உணவையே உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் சிலர் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் வீழ்சிகண்டுள்ளது.

இந்நிலை தொடருமாயின் சோமாலியாவை விட எமது நாடு படு பாதாளத்திற்கு சென்றடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடல்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளவாறு, தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவும் வைத்தியசாலைகளின் தேவைகளுக்காக மீன் இனங்களை இறக்குமதி செய்வதாகவுவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே எமது பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க முடியாத நிலையிலும், கரையோரங்களில் மீன் பாடு இல்லாமலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்த வரும் நிலையில், தற்பொழுது கடல்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படியான விடையங்களை கூறுவது ஏற்கமுடியாது.

கடல் அட்டை பண்ணை மூலம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக முன்னர் கூறினார். ஆனால் தற்போது, கடலட்டை பண்ணையும் இல்லை. மீனவர்களிற்கு வாழ்வாதாரமும் இல்லை.

கடல் தொழில் அமைச்சர் ஒரு தமிழனாக இருந்து கொண்டே தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சராக உள்ளார். அயல் நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகளின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சர், இரும்பு ரோலர் படகு மூலம் அவர்களை இடிப்போம் என்று கூறியவர், தற்பொழுது சீனாவிடம் சென்று மண்டியிட்டு மீன் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலை தொடருமாயின், இனிவரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் இனங்களையே நாங்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாமல் அழிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் செயற்படும் வேளையில் மாநாடு ஒன்றுக்காக  கல்வியமைச்சிர் வௌிநாடு சென்றுள்ள நிலையில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் அதில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது!

அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டணம் செலுத்தும் நடவடிக்கை ஒன்லைன் முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்கள் இது தொடர்பான வேலைத்திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடு நடவடிக்கைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இயங்கும் 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அனைத்து வீதிகளையும் இவ்வருட இறுதிக்குள் வரைபடமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரை பலத்த மழையும் பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாக இருக்க வேண்டும் என இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாவாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாவாக இருக்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், 10,000 ரூபாயாக இந்த கட்டணம் காணப்பட்டது.

அந்த பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன்25.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையர்!

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீராங்கனை சமித துலான் வெள்ளி பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் கலந்து கொண்டு சமித துலான் குறித்த வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சமித துலான் 64.09 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கை வரும் சீன கப்பல்!

சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ கொழும்பு துறைமுகத்தை இன்று (25) வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதை முன்னிட்டு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருளந்தன.

இலங்கை வரும் சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இதற்கமைய ‘ஷி யான் 6’ கப்பல் சுமார் 25 நாட்கள் இலங்கையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கடல் எல்லையில் இலங்கையர் உட்பட 12 பேர் கைது!

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (23) மாலை சுங்கத்துறையினர் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து 12 நாட்டில்கள் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை, புத்தளம் பகுதியை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து மரைன் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந் தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.