காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது

யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 இற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள்மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவே கேஸ் சிலிண்டர் திருடியதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளனர்

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குரு நகர் பகுதியில் சேந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமச்சந்திர தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மரத்தை நட்டவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று (26) மாலை பொலிஸாரின் சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது சுமார் 6 1/2 அடி உயரமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்இ அவை சுமார் 3 – 6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடி அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு தயாராகியுள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (27) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 30 மற்றும் 31ஆம்  திகதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

இன்றைய ராசிபலன்26.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிக்கு உரிமை கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை

கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதி இராணுவம் வெளியேறிய நிலையில் , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (26) பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அதிர்ந்துபோன காணி உரிமையாளர்கள், காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என கூறி இருந்தனர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள்.

இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி , இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து , உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை-  மனம் குமுறும்  உரிமையாளர்கள் 

அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும் ? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என காட்டமாக கூறினர். அதனை அடுத்து , இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது.

அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர். அதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது.

அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே , அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை என மனம் குமுறுகின்றனர் காணி உரிமையாளர்கள்.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா ? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

குடும்ப பெண் அடித்து கொலை கணவனுக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்த குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 23 வயதான ஞானசீலன் கீதாஞ்சலியினை அவரது கணவர் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம்  (24)உடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில்,  23ஆம் திகதிமகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில்  மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து  24 ஆம் திகதி  முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையில் பெண்ணின் கழுத்தில் பலமாக அடிவிழுந்த காரணத்தினால் பெண் அவர் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கு இடையில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

இதன்போது கணவன் மனைவியின் கழுத்தில் தாக்கியதில் மனைவி நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் உடலத்தினை யாருக்கும் தெரியாமல் மலசலகூடத்திற்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கணவன் நேற்று (25)முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்த இருவருக்கு விளக்கமறியல்

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஒன்லைனில் ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை செய்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (26)  ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை பேருந்து, வேன் தொடர்பில் கடும் தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரதி பொலிஸ்மா அதிபருடன் ஆய்வு செய்தபோது, ​​அவர்களின் வாகனங்களையும் சோதனை செய்தோம். பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அது பாடசாலை சேவையாக மாற்றப்படுகிறது, வேன்களை எடுத்துக்கொண்டால் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பாிசோதர்களுடன் இந்த ஆய்வை செய்தோம். இதன்போது சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்தோம்.  இந்த விடயத்தில் நாங்கள்  மிகப்பெரிய காரியத்தை செய்கின்றோம், ஏனென்றால் இது போன்ற பராமரிப்பற்ற வாகனங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுவதை தடுப்பதற்காகும் என்றார்.

கல்வி அமைச்சின்  விசேட அறிவிப்பு 

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் செயற்படும் வேளையில் மாநாடு ஒன்றுக்காக  கல்வியமைச்சிர் வௌிநாடு சென்றுள்ள நிலையில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் அதில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கழிவறையில் போதைப்பொருள் பாவித்த ஆண் சடலமாக மீட்பு!

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று (26.10.2023) காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இதனையடுத்து தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை மகன் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.