தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் குழப்பம்!

தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்ட விரோத விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி கூறி, காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழில் சிறுவனுக்கு மதுபானம் கொடுத்தவர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனொருவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் நேற்று  (27) சிறுவனுக்கு முச்சக்கர வண்டியினுள் வைத்து மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். 

இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். 

சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னல் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய கடும் மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை! 

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் அவர் கலவரமாக நடந்து கொண்டதன் காரணமாக கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், பணிப்பாளர்களும் கண்டிப்பாக சுற்றிவளைப்புக்களை நடத்துவோம். அப்படியும், அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது போனால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவித்துள்ளேன்.”

இதேவேளை, பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அரிசியின் விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அரிசி வியாபாரி டட்லி சிறிசேன, அரிசியை மறைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடன் கைதுசெய்ய வேண்டும்!

மூகத்தில் இனவாதத்தை விதைத்து – அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவரின் பின்புலத்தில் பாரியதொரு வலையமைப்பு இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், மகாநாயக்க தேரர்களும் உடன் தலையிட வேண்டும் எனவும் வேலுகுமார் எம்.பி. இடித்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

மக்கள் மத்தியில் நற்சிந்தனைகளை விதைத்து, இந்த சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பௌத்த பிக்குகளுக்கு இருக்கின்றது. ஆனால் புத்தர் காட்டிய வழியைவிடுத்து, தடம்மாறி பயணிக்கும் பிக்குகளும் உள்ளனர்.

அவர்களில் முதன்மையானவர் தான் அம்பிட்டிய சுமணரத்ன தேரர். ‘காவி’ உடைக்குள் ஒளிந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக செயற்படுகின்றார். ‘வெட்டுவேன், கொத்துவேன்’ என கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றார்.

விகாரையில் இருந்து நல்லதைபோதிக்க வேண்டிய அவர், நடுவீதிக்கு இறங்கி தமிழர்களை வெட்டுவேன் என எச்சரித்துவருகின்றார். இது முதன்முறை அல்ல. அம்பிட்டிய தேரர் தொடர்ச்சியாக அடாவடியில் ஈடுபட்டுவருகின்றார். அரச அதிகாரிகளைக்கூட மிரட்டுகின்றார்.

இப்படி அடாவடியில் ஈடுபடும் அவரை கண்டதும் காவல்துறையினரும் வணங்கிவிட்டே, நடவடிக்கையில் இறங்குகின்றனர். ஆக அம்பிட்டிய தேரரின் பின்புலம் குறித்து எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது.

ஒருபுறம் இனவாதம் கக்கிவிட்டு, மறுபுறத்தில் கதறி அழுது அனுதாபம் தேடுகின்றார். தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசைதிருப்ப முற்படுகின்றார். ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

இது சாதாரண சம்பவம் தானே, அவர் அப்படிபட்ட தேரர்தானே என ஜனாதிபதி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. தேரர் என்ற போர்வையில் அவர் சண்டித்தனம் காட்டிவருகின்றார். தமிழர்களுக்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுகின்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபர்போலவே செயற்பட்டுவருகின்றார். ஆக கடந்தகாலங்களில் இந்நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களை படிப்பிணையாகக் கொண்டு அவரை உடன் கைது செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என்றார்.

நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, முதலாவது போட்டி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

போட்டி இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மற்றைய போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 315 ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் நபர் ஒருவர் கைது!

மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன்  நேற்று (27) மதியம் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 315 ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக  செயல்பட்ட மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்  குறித்த நபரை கைது செய்ததோடு ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளையும்  கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மற்றுமொரு வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து!

இன்று (28) காலை 7.30 மணியளவில் பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

 விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு!

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவ பீரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள பொல்கொட ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை சடலம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய   விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் சுமார் 5 அடி உயரம், மெல்லிய உடல்,  முழங்கைக்கு அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் கருப்பு நிற காற்சட்டை மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.