ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு புதன்கிழமை

ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் 1 ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அன்றைய தினம் குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மௌலவியால் தாக்குலுக்கு இலக்கான  8 வயது குழந்தை!

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை (28) இரவு கல்விக்காக பள்ளிவாசலுக்கு சென்ற போது சந்தேகநபர் ஒருவரால் குழந்தையை தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த குழந்தை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தொடுவா கடற்பிரதேசத்தில் மீனவர் சடலமாக மீட்பு!

தொடுவா கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரின் சடலம் அம்பகதவில கரையோரத்தில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – மஹவெவ, மட்டகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஜோசப் அலோசியஸ் எனும் 65 வயதுடைய திருமணமாகாத நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) காலை மீன்பிடித் தொழிலுக்காக மீனவர்கள் இருவர் கடலுக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடலுக்குள் சென்ற மீனவர்கள் இருவரும் பயணித்த மீன்பிடி இயந்திர படகு திடிரென கவிழ்ந்ததில் இருவரும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மற்றுமொரு இயந்திரப் படகில் இருந்தவர்கள் கடலில் வாழ்ந்து காணாமல் போன மீனவர்கள் இருவரில் ஒருவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

எனினும், மற்றைய மீனவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன மீனவரைத் தேடி பிரதேச மீனவர்களுடன் இணைந்து கடற்படைநினரும், பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 29 ஆம் திகதி காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (30) அம்பகதவில பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12 ரயில் சேவைகள் ரத்து!

இன்று காலை மற்றும் மாலையில் பல அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலையை சேர்ந்த சுமார் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரத்திற்கு கட்டுப்பாட்டு விலை!

உரத்திற்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உர விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட தேடல்கள் மற்றும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நவீன விவசாய தொழில்நுட்ப செயலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோ எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்று (29) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பொதி எவ்வாறு வந்திருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

பயிற்சியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதைக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு பதிலாக துஷ்மந்த சமிர இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இன்றைய போட்டியில் துஷ்மந்த சமிர விளையாடவுள்ளார்.

இதேவேளை இன்றைய போட்டியில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

நாட்டின் மேற்குக் கடலில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சீன கப்பல்!

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

“ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த ஆராய்ச்சிக்கு அமைய  கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள்  எடுக்கப்படவுள்ள நிலையில், அதில் நாரா நிறுவனம் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஆய்வின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுப்பு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முயற்சி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் (31) தமது சேவையிலிருந்து விலகி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடர்ந்தும் அதிகாரிகள் தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் .ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.