இன்று முதல் சீனிக்கான வரி அதிகரிப்பு!

  இன்று (02) முதல் சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (02) முதல் ஒரு வருடத்திற்குள் இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

லங்கா சதொசாவில் பால்மா உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைப்பு!

பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

இதன்படி, லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாவாகும்.

இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதேவேளை, சதொசவின் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளன.

பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சிலவற்றின் உரிமம் ரத்து!

வரி செலுத்தாத 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட பலரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்கல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று (02) இந்த  உத்தரவை பிறப்பிடத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் குறித்த சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணவனின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டிய மனைவி!

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

பெண்ணுக்கு பிணை வழங்கிய நீதவான்
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு!

காளான் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம், விக்டோரியா மாநிலம் லியோங்காதா நகரில் மதிய உணவில் கலந்து கொண்டு இறந்த மூவரும் நோய்வாய்ப்பட்டனர்.

மேலும் உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான எரின் பேட்டர்சன், தாம் குற்றமற்றவர் என்று கூறியுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடத்துவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதிய உணவில் நான்கு பேர் கலந்து கொண்டதுடன் அவர்கள் அனைவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நால்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 70 வயதான தம்பதியரும் 66 வயதான பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இறந்தனர்.

மேலும் ஒருவர் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காளான் வகையைப் பயன்படுத்தி ‘பீஃப் வெலிங்டன் பை’ சமைத்ததாக எரின் பேட்டர்சன் கூறியிருந்தார்.

“நான் நேசித்தவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று எரின் பேட்டர்சன் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02) காலை  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு அடியில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய வழக்கில் இருந்து நாமல் விடுதலை!

கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், அவற்றில் நம்பிக்கை இல்லை எனவும் அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அத்துடன், தற்போது நீதிமன்றத்தை தவிர்த்து வரும் வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான  பிரபாத் கருணாஜீவவுக்கும், நான்காம் பிரதிவாதிக்கும் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை உடனடியாக நீக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிரபாத் கருணாஜீவவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை மீளப்பெறுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது முறைகேடாக ஈட்டிய 30 மில்லியன் ரூபா பணத்தை கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவனத்தில் பயன்படுத்தியமை ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை அணி!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இறுதியாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் வங்கடே மைதானத்தில் சந்தித்தன.

இந்நிலையில் இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஒரு போட்டியிலேனும் தோற்காத ஒரே அணியாக இந்திய அணி, இன்று இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது.

அதேநேரம் இலங்கை அணி இதுவரை விளையாடிய 06 போட்டிகளில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டன.  இவர்களில் 80% ஆண்களே பதிவாகியுள்ளனர். எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையிலானவர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகிறது” என்றார்.

டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.