SBI யாழ்ப்பாண கிளை திறப்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப் பயணமானார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார். 

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை  சந்தித்தார்.

அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்துகொண்டார்.

பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

‘அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததையும், நாட்டின் தேவைக்காக அவர்கள் ஒருவரையொருவர் பல்வேறு வழிகளில் ஆதரித்ததையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்’ என்று கூறினார். மேலும்

‘வடக்கிலும் இந்த நாட்டிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்காகவும் குறிப்பாக இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார். 

அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவு கூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

ஓட்டமாவடியில் இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் பேரணி!

பலஸ்தீன காஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் உயிரிழப்பு மற்றும் சொத்தழிவுகளை சந்தித்து வரும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இன்று  ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்திலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களிலிருந்தும் ஊர்வலமாக வந்த பொது மக்கள் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாயல்களின் நிருவாக சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முகவரியிடப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீனிடம் உலமா சபையின் பிரதிநிதிகளால்  கையளிக்கப்பட்டது.

புறக்கோட்டை  தீ விபத்து – 22 வயது யுவதி பலி!

புறக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீயில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பிற்கானப் போட்டிப் பரீட்சை நடாத்தப்படும்

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேர்வில் பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பு

சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வவுனியா மாவட்ட செயலகத்தில் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

லியோ வெற்றிவிழா கொண்டாட்ட வசூல் எவ்வளவு தெரியுமா?

லியோ படம்
லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளிவந்த திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் விஜய்யை தாண்டி த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா என பல கலைஞர்கள் நடித்தார்கள், அவர்கள் அனைவருக்குமே மக்களிடம் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

அனிருத் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் தான்.

முழு வசூல்
கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்த படக்குழுவும் நேற்று நவம்பர் 1, வெற்றிவிழா கொண்டாடினார்கள். விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் படம் மொத்தமாக இதுவரை ரூ. 550 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில் இன்றைய தினம் (02-11-2023) முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் யோசனைக்கு அமைவாக, இறுதி வாடிக்கையாளருக்கு பயிற்சிப் புத்தக விற்பனைக்கான சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, பாடசாலை தலைமை ஆசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரும் மாணவருக்கு விற்பனைக் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபன கிளைகளில் இருந்து இந்த தள்ளுபடியைப் பெறமுடியும்.

இந்த பயிற்சி புத்தகங்கள் நன்கு முடிக்கப்பட்ட அட்டை மற்றும் GSM 60 காகிதத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவை தற்போதைய சந்தையில் கிடைக்கும் பயிற்சி புத்தகங்களுடன் போட்டித்தன்மையுடன் தயாரிக்கப்படுகின்றன எனவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகும் மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கை பயணம்!

இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதே நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று  (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.  

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்ததோடு, தமிழ் சம்பிரதாய முறைமைகளுக்கமைய ஜனாதிபதிக்கு கோலாகலமாக  வரவேற்பளிக்கப்பட்டது.  இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

கொட்டகலை, மவுன்டவுன் தோட்டத்தின் திம்புல கீழ்ப்பிரிவு பகுதியில் இந்திய உதவியில் ஆர்பிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் நிகழ்நிலை முறைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அதனையடுத்து அட்டன் தொழில்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூடம் மற்றும் கனிணிப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வும் நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால் இன்றைய நிகழ்வைக் கூட சாதகமாக நடத்தியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்தார்.  

இந்த நிகழ்வை தொடர்ந்து மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கும் என்றும், அவர்களுக்கான காணி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தற்போதைய மழையுடனான காலநிலை இன்று (03) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100க்கு மி.மீக்கு மேல் பலத்த மழையும் பெய்யும்.

ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இன்றைய ராசிபலன்03.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல்அசதி உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபட சிரமங்கள் குறையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர் களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத உறவினர் வருகைக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் தரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். பிற்பகலுக்கு மேல் தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட வெற்றிகள் வசப்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போல நடைபெறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரியம் அனுகூலமாகும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல் நல னில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளை பிற்பக லுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கிணற்றில் தவறி வீழ்ந்தநபர் உயிரிழப்பு!

பொலன்னறுவை பிரதேசத்தில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றில் தவறி வீழ்ந்ததனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.