சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இ​டையிலான போட்டி தற்சமயம்  இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கார் படைத்திருந்த சாதனையைும் சமன் செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கார் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பெற்றுள்ள நிலையில், அதனை இன்றைய தினம் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

அதேநேரம் Shreyas Iyer 77 ஓட்டங்களையும் Rohit Sharma 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada, Keshav Maharaj, Tabraiz Shamsi ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக குறித்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாவை இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெறுமதிக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் இந்த சந்தேகநபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இலக்கம் 31, 7, பெபிலியான வீதி, நெதிமால, தெஹிவளை என்ற முகவரியில் ‘D marc solution (PVT) LTD’ என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வந்ததுடன், அதன் உரிமையாளர்களாகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 31 வயதுடைய விக்னேஸ்வரன் கணேசன் எனவும் பெண் சந்தேகநபர் 36 வயதான ரேவல் நிரோஷனி ராஜரத்தினம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுதிகாரியின்  – 071 – 8137373 அல்லது 011 2852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

வெள்ளவத்தையில் யாழ் இளைஞனின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதேசவாசிகளால் சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் ச்ண்டிலிப்பாய்க்கும் இடையே இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளன.

2 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உள்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்

காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் அறையில் தடுத்து வைத்து நான்கு பேருக்கு விற்பனை செய்ததாக அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி ஒன்றின் முகாமையாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய காதலன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அகலவத்தை  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பணத்திற்காக தனிநபர்களுக்கு விற்கப்படுவதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு அதிகாரிகளும் இணைந்து குறித்த பெண்ணை பொறுப்பேற்றதுடன் விடுதியின் முகாமையாளரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் எனவும், அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு நேபாளத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான  தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கான மகிழ்வான செய்தி!

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதலாம் கட்ட கொடுப்பனவுகள்

முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படவுள்ளது.  

இந்தநிலையில், அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கான விசேட வாரம் நாளை(06)  ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும். 

இந்த வாரத்தில் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார். 

 பின்னர் இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டது. 

சம்பள அதிகரிப்பு

 அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது பொருளாதார தடை!

ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கு ஆசியப் பொறுப்பாளர். தமது சொந்த மண்ணில் 86 சதவிதத்தை பறி கொடுத்து அகதிகளாகி வெறும்14 சத நிலத்தை மட்டுமே தம்வசம் வைத்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலால் நடத்தப்படும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலை குறித்து உரையாடினார்.

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான இஸ்ரேலை கண்டிக்கும் கருத்தரங்கில் நீங்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினீங்களே?

மருத்துவமனைகள் மீது, பாடசாலைகள் மீது தாக்குதல் நடக்கிறது. தண்ணீர் வசதி, மின்சாரம் துண்டிக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலானது எல்லாவிதமான சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது.

ரஷ்யாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையில் 23 மாதங்களாக நடந்து வரும் போரில் இது வரை 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால், கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி முதல் கிட்டத்தட்ட 25 நாட்களாக இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலில் மட்டும், இதுவரை 11,740 பேர் பலியாகியுள்ளனர். அப்படியானால், இந்தப் படுகொலையின் கோர முகத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கு பாலஸ்தீன மக்கள் கட்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஹூசைன் உலக தொழிற்சங்க சம்மேளனத்தில் எங்களோடு பணிபுரிந்து வருகிறார். அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். முதலில் நான் அனுப்பிய செய்தியை பார்த்திருக்கிறார். பிறகு நான் அனுப்பிய எந்த செய்தியையும் அவர் பார்த்ததாகத் தெரியவில்லை. அவருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று கவலைப்படுகிறேன். எனவே, பேசும்போது இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரத்தானே செய்யும்.

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரான்ஸ் நாட்டினருக்குச் சொந்தமோ, அதே போல பாலஸ்தீனம் என்பது அராபியர்களுக்குச் சொந்தம் என்று தெளிவாகக் கூறியவர் காந்தி. 1948 இல் இஸ்ரேலை இங்கிலாந்து தனது நலன்களுக்காக உருவாக்கியபோது 55 சத நிலம் இஸ்ரேல் வசம் இருந்தது; 45 சத நிலம் பாலஸ்தீன மக்களிடம் இருந்தது. இப்போது 86 சத நிலம் அவர்களிடம் உள்ளது மீதம் 14 சத நிலத்தில்தான் பாலஸ்தீன மக்கள் உள்ளனர். அதையும் கைப்பற்ற துடிக்கிறது இஸ்ரேல். அவர்களை வீடுகளில் இருந்து துரத்திவிட வேண்டும் என்று இஸ்ரேல் துடிக்கிறது.

பாலஸ்தீன தூதர் உங்கள் தொழிற்சங்க தலைமை அலுவலகத்திற்கு வந்து கொடி ஏற்றி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஏஐடியுசி சங்கமானது, 1920 ல் 104 ஆண்டுகளுக்கு முன்னால், அக்டோபர் 31 ஆம் திகதி உருவானது. அந்த நாளிலேயே இந்தியா முழுவதிலும் உள்ள எங்களது சங்க உறுப்பினர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் எங்கள் அழைப்பை ஏற்று, பாலஸ்தீன தூதர் அட்னான் முகமது ஜாபர் ஹைஜா ஏஐடியுசி கொடியை ஏற்றினார்.

1967 ஆம் ஆண்டு இருந்த எல்லைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் என்பதை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நேருவின் காலத்தில் இருந்தே பாலஸ்தீனத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தந்து வந்திருக்கிறது. 1948 இல் உருவான இஸ்ரேலை இந்தியா ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடு இல்லவே இல்லை. எனவே, பாலஸ்தீன மக்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக I2U2 நாடுகள் என்று சொல்லி இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும், இங்கிலாந்திற்கும் – அமெரிக்காவிற்குமான உறவுகள் அதிகரித்து வருகின்றன. அதாவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் கருத்தியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதில் சோகம் என்னவென்றால், இந்தியாவினுடைய அங்கீகரிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையில் எந்தவிதமான விவாதங்களும் நடைபெறாமல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இஸ்ரேலுக்கு உடனடியாக ஆதரவு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி கூட, அடுத்த சில தினங்களில் இஸ்ரேலுக்கான ஆதரவு வேகத்தை குறைத்துக் கொண்டார். உலக நாடுகளில் இஸ்ரேலை எதிர்த்து மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன இந்தியாவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடக்காமல் இருக்கலாம்; ஆனால், அறிவுஜீவிகள், சுயேச்சையான பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசுகின்றனர். ‘நான் யூதர்களை பார்த்து பச்சாதாபம் கொள்கிறேன். ஆனால் அதற்காக அரபிய நிலத்தை பறித்து அவர்களுக்கு நீதி அளிக்க முடியாது’ என்று அப்போதே கூறியவர் காந்தி.

இரண்டாவது உலக போரின் போது கடுமையான அடக்கு முறையை சந்தித்தவர்கள் யூதர்கள். அவர்கள் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது வியப்பாக இருக்கிறதே?

யூதர்கள் பிரச்சினை பற்றி 1897 இலிருந்தே பேசுகிறார்கள். இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொலை செய்தது யூதர்கள் என்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் வெறுப்பை உமிழ்ந்தனர். இரண்டாவது உலகப் போரின் போது ஹிட்லரால் அடக்குமுறைகளுக்கு ஆளான மக்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். யூதர்கள் அவர்களின் புனித நூலான பழைய ஏற்பாட்டில் உள்ளபடி, தங்களுடைய மூதாதையரான ஆபிரகாம் வழிவந்தவர்கள் என நினைக்கிறார்கள். எனவே யூதர்கள், தங்களுக்கு சொந்தமான நிலம் ஜெருசலேம் என்று நினைக்கிறார்கள். நிலம் இல்லாத யூதர்கள் ஜெருசலேம் இருக்கும் பாலஸ்தீனத்தில் குடியேறுவது சரி என்று நினைத்தார்கள். அங்கு குடியேறிய யூதர்கள் தாங்கள் நிலத்தை அரேபியர்களுக்கு வாடகைக்கோ, விற்கவோ கூடாது என தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இதே நாளில், 106 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உங்களுக்கென தனியான நிலப்பரப்பை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று யூதர்களுக்கு உறுதிமொழி கொடுத்தார். இது பால்ஃபோர் உறுதிமொழி என்று அழைக்கப்படுகிறது. யூதர்களுக்கு தனி நாடு என்று உருவாக்குவது மத அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் சரியல்ல என்ற குரல் அப்போதே எழுந்தது. ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் மந்திரிசபையில் இருந்த ஜேம்ஸ் மாண்டேகு என்பவர் அதை எதிர்த்தார். (மாண்டேகு – செம்ஸ்போர்டு ஒப்பந்தத்தில் வருபவர் தான்). இப்படி ஒரு குரல் யூதர் ஒருவரிடமிருந்தே வந்திருக்கிறது.

அந்தப் பகுதியை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த ஒட்டாமன் குடியரசை முதல் உலகப்போரில் இங்கிலாந்து தோற்கடித்து அதனை பிரான்ஸ் நாட்டோடு பங்கு போட்டுக் கொண்டது. ‘நவீன அரபு உலகத்தை’ அமைப்போம் என்று அந்நாடுகள் கூறின. இப்படி அங்கு தங்கள் ஆதிக்கத்தை நிறுவியதற்கு பல காரணங்கள் உண்டு. எகிப்தில் சூயஸ் கால்வாய் இருந்தது. இங்கிலாந்து அப்போது ஆசியாவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள காலனி நாடுகளோடு தொடர்பை வைத்துக் கொள்ளவும், வர்த்தக நலனுக்காகவும், அந்த நாடுகளுக்குச் செல்லவும் அந்தப் பகுதி அவசியமாகும். அங்கு இருந்த எண்ணை வளம் முக்கியமான ஒன்றாக இருந்தது. எனவேதான் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மத அடிப்படையில் அரபு மக்களுக்கும், யூத மக்களுக்கும் மோதலை உருவாக்கி ஒரு பதற்றமான பகுதியை திட்டமிட்டு இங்கிலாந்து உருவாக்கியது. அதுதான் இஸ்ரேல். தங்களுடைய ஏகாதிபத்திய நலனுக்காக அங்கு யூதர்களை குடியேற்றின. ஐரோப்பா நாடுகளில் உள்ள யூத சங்கங்கள் மக்களை திரட்டி அங்கு குடியேற்றின. ஏகாதிபத்திய நலனை பாதுகாப்பதற்காகவே இஸ்ரேல் உருவானது.

ஊடகங்கள் இதனை யூதர்களுக்கும் – இசுலாமியர்களுக்கும் இடையேயான மோதலாகத் தானே பார்க்கின்றன?

ஜெருசலேம் எப்படி யூதர்களுக்கு புனிதமானதோ. அதே போல கிறித்தவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் புனிதமானதுதான். இசுலாமியர்கள் இப்ராகிம் என்று சொன்னால், கிறிஸ்தவர் ஆப்ரஹாம் என்று சொல்கிறார்கள். இசுலாமியர்களின் இரண்டாவது புனித தலமான அல் ஹராம், அல் ஷரிப் மசூதிகள் அங்குதான் உள்ளது. ஜெருசலமை கிறிஸ்தவர்களும் புனிதமாக நினைக்கிறார்களே. யூதர்களுக்கு அங்கு அவர்களின் புனிதமான மேற்கு சுவர் உள்ளது. உண்மையில் அங்கு நடப்பது மத அடிப்படையிலான மோதல் என்றால், அரபுநாடுகள் ஏன் இஸ்ரேலுக்கு எதிரான வலுவான குரலை எழுப்பவில்லை.

இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலனுக்காக இந்த மோதல் நடக்கிறது. அதனால் தான் பத்திரிகைகள் மத மோதல் என சித்தரித்து, அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நலனை மறைத்து செய்தி வெளியிடுகிறார்கள். நாடுகள் எந்த நிலை எடுத்தாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் யூதர்கள் உட்பட இஸ்ரேலை எதிர்த்து ஆர்ப்பரிக்கின்றார்களே. என்னதான் மறைத்தாலும், சமூக ஊடகங்கள் இருப்பதால் ஆர்ப்பாட்ட செய்திகள் வெளிவருகின்றன. சிறைக்கு அனுப்புவோம் என்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மிரட்டலையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பிரான்சில் போராடினர்.

பொலிவியா அரசு இஸ்ரேல் அரசுடன் தனது தூதரக உறவை முறித்துக் கொண்டது. கொலம்பியா, சிலி போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் தங்கள் தூதரை திரும்ப பெற்றுக் கொண்டன. தென்னாப்பிரிக்கா தனது தூதரக அந்தஸ்தை குறைத்துள்ளதே?

ஆப்பிரிக்க நாடுகள் பல்லாண்டுகளாக நிறவெறிக்கு எதிராக போராடியவை. எனவே, அப்பட்டமாக நிறவெறிக் கொள்கையை பின்பற்றும் இஸ்ரேலுக்கு எதிராக உறவுளைத் துண்டித்துள்ளன. இது மற்ற நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் தானே. கொரோனா காலத்தில் எபோலா வைராசால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளை மேற்குலக நாடுகள் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்கு தடுப்பூசி கிட்டவில்லை. இப்போது தான் சற்று மீண்டு வந்துள்ளன. இந் நிலையில் இது போன்ற நாடுகளின் நிலைபாடு பாராட்டுக்குரியதே.

ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உலகெங்கிலும் அமைதியை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உண்டு. சோவியத் யூனியன் மறைவிற்குப் பிறகு பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த 74 தீர்மானங்கள் 1992 ல் இரத்து செயப்பட்டு விட்டன. காஸா கடற்கரை, மேற்கு கரை, சினாய் பாலைவனம், கோலன் ஹைட் போன்ற இடங்கள் பாலஸ்தீனத்திற்கு உரியவை என ஒத்துக்கொண்டதையே இப்போது இஸ்ரேல் மறுக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவிவ் என இருந்ததை ஜெருசலேம் என சொன்னார். அவராக அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றி அமைத்துக் கொண்டார். பாலஸ்தீனத்தில் எந்த தொழில்களும் இல்லை. எனவே, பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்குள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேலைக்கு செல்வர். ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பின்வாங்குவதாக இஸ்ரேலோடு போடப்பட்ட இரண்டு ஆஸ்லோ ஒப்பந்தங்களையும் அது மதிக்கவில்லை. எனவே, சுதந்திரமான பாலஸ்தீனம் வேண்டும்.

இந்நிலையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரேஸ் ஹமாசின் தாக்குதலைக் கண்டித்த அதே வேளையில், அந்த தாக்குதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஈராக் மீது எப்படி போர் தொடுத்தார்கள். கியூபா மீது நியாயமற்ற பொருளாதார தடை இன்னமும் இருக்கிறதே. லிபியா மீது தடை விதித்தார்களே. எனவே யூத நிறவெறியை எதிர்த்து உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். அங்கு நடக்கும் இனப் படுகொலையை தடுக்க முன்வரவேண்டும். இஸ்ரேல் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும். அதனோடு வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முதுபெரும் தொழிற்சங்கமான ஏஐடியுசி, பாலஸ்தீன தூதரை அழைத்து புதுதில்லியில் தங்கள் அலுவலகத்தில், சங்கக் கொடியை கடந்த அக்டோபர் 31 அன்று ஏற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி மோசடி தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமோர் செய்தி!

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி  மருந்து குப்பிகளை தயாரிப்பதற்காக தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டமை குறித்த தகவல் வௌியாகியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தேவை எனக் கூறி  குறித்த இரத்தம் பெறுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் தயாரிப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளில் தாமதம் ஏற்படுவது பிரச்சினைக்குரியது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த காலங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள்  தொடர்பில் விசாரணை நடத்த தற்போதைய சுகாதார அமைச்சருக்கு தனது ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.