யாழ் பழைய கச்சேரி கட்டிடம் சீனாவிடம் செல்கிறதா?

 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

யாழிற்கு வருகை தந்துத்துள்ள சீனத் தூதுவர் உள்லிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தைப் பார்வையிட்டனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்வாறான நிலையில், சீனதூதுவர் குழுவினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யாழில் திஸ்ஸ விகாரை தொடர்பில் போராட்டம் முன்னெடுப்பு!

  யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா உற்சவம் நேற்றையதினம் ( 5 )மற்றும் இன்று (6) ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. திஸ்ஸ விகாரையில் நேற்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக  நீதிமன்றம் கட்டளை

“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர். இதன்போது, அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை திஸ்ஸ விகாரை போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்று முன்தினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாடு!

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திற்கு 46 வீதமான மக்கள் விருப்பம் உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் விளம்பரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பின்படி தற்போதைய அரசாங்கத்திற்கு 17 வீதமான மக்களின் அங்கீகாரமும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அங்கீகாரத்தில் 29 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமான அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார பின்வருமாறு கருத்தை வெளியிட்டார்.

“ஜே.வி.பி. இன்று ஜனாதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசுகிறதா? இல்லை. நான் சிவப்பு யானை என்று அழைத்தது நினைவிருக்கிறது. இந்த நாட்டை திவாலாக்குவதற்கு மிகவும் கடினமாக உழைத்தவர்கள் அந்த தோழர்களே. ஜே.வி.பிக்கு இன்று அதிக பணம் உள்ளது. இப்போது. கூட்டத்திற்கு சுமார் 100 இலட்சம் ரூபா பணம் செலவிட்டுள்ளனர். குருநாகல் கூட்டத்திற்கு நுவரெலியா மக்களும் வருகின்றனர்.” என குறிப்பிட்டார்.

சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இல்லை!

ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவிக்க நேற்று (05) சம்மாந்துறையில் ‘கட்டியெழுப்புவோம்’ எனும் தலைமைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன் போது அங்கு வருகை தந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும். கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.

வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால் கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும். அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும்.

இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.

இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த இலாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது. நாடு வங்குரோத்தடைந்தது.

எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழங்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்.

அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், கேஸ், எரிபொருட்ளின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது.

இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.

ஒரு சில தொழில்களை வழங்கினாலும், கடந்த 03 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது.

வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும், இங்கு வந்து வாக்குறுதிகளை தருவார்கள். அவற்றை நிறைவேற்றும் பணம் யாரிடமும் கிடையாது. இதிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028 ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம்.

இதற்கு முதல் எங்கள் கடனை அடைக்கும் பணம் இக்காலப் பகுதியில் எம்மிடமில்லை. அதனால் 2028 இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

வைத்தியசாலைகளில் மருந்து வேண்டும். தாதிகள் இருக்க வேண்டும். வைத்தியர்கள் இருக்க வேண்டும். உபகரணங்கள் இருக்க வேண்டும். இதனை தீர்க்க வேண்டும். மாணவர்கள் காலையில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். பாடசாலைகளில் உபகரணங்கள் இருக்க வேண்டும்.இதனை விட உணவுப் பிரச்சினை உள்ளது.

பசளையில்லா காரணங்களினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தை புத்தளம் முதல் முல்லைத்தீவு வரை மேற்கொள்ள முடியும். யாழ் பிரதேசத்தில் காற்றாடி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அதனால் புதிய முறையில் டொலரை தேட வேண்டியுள்ளது. அயல்நாடான தமிழ் நாடு கேரளா போன்ற பிரதேசங்கள் மிகவும் முன்னேற்றம் அடைவதற்கு காரணம் என்ன? கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் மிகவும் வேகமாக முன்னேறுவதற்கு காரணம் என்ன?

அவர்கள் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை விடவும் டிஜிடல் சேவையை அனுப்புவதன் மூலமாகத்தான் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆதலால் டிஜிடல் மூலமாக அதிகம் சம்பாதிக்க முடியும்.

இந்த வேலைத் திட்டங்களை செய்வதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது.

அதுதான் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும்.கடந்த 40 வருடங்களில் தமிழ் இளைஞர்கள் நினைத்தார்கள். தமிழர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கினால் அதன் மூலமாக வளமான நாட்டை உருவாக்க முடியுமென்று நினைத்தார்கள். அதன் மூலமாக அவர்கள் மட்டுமல்ல நாங்களும் பாதிக்கப்பட்டோம்.

ஜே.வி.பி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று புரட்சி செய்தார்கள். அவர்களும் அழிந்து போனார்கள்.

முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகமான உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும்.

பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்ற வேண்டும். தந்தைக்கு பின் மகன், தாய்க்கு பின் மகள் என்ற அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று (06.11.2023) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை  நிலவக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ்  நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு  அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், முன்பு இருந்த விலையிலேயே லாஃப்ஸ்  சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.1,595க்கும் கொள்வனவு செய்ய முடியும்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு கீழே..


 

இன்றைய ராசிபலன் 06.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ் வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கவலை தரும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவைப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பெண்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் பொறுமை அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாக னத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரு வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும் பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவு கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்களும் தொல்லைகளும் நீங்கும். சிலருக்கு எதிர் பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்க ளில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங் களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கடன் கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமா னவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகவும்.

துலா ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமா னவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதிகப்படியான செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக் கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்தி ருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமை யும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடு வதை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதா யம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற் படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடித்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர் களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

யாழில் தனிமையில் செல்லும் பல்கலை மாணவிகளிடம் அத்துமீறும் நபர்!

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த ஒருவரை பல்கலைக்கழக மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்.

காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும் போதும் வரும் போதும் வீதியால் வருகின்ற ஒரு சிலர் ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற போக்கு அதிகரித்து வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கடந்த காலங்களில் ஒரு சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொது மக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.