புத்தளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கியுல பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீருக்குள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி , வேலாசிய பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலாகே பந்துல ஹேரத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழும் இவர், தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிப்பதை தனது தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கியுல பகுதியில் உள்ள தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், அங்கு வருகை தந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (09) காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார். இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்

நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியை இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனித்துவமான மாற்றம் ஒன்றின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளமையே இந்த விசேட கவனத்திற்கு காரணமாகும்.

நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக Diana Puketapu-Lyndon நியமிக்கப்பட்டுள்ளார்.

1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Martin Sneddenயினால் காலியான அந்த நாட்டின் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு Diana நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து 1926 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையில் முழு உறுப்பினராக ஆனதுடன் 1930  ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

சரிவடைந்த தங்கம்

இலங்கையில் அன்நாடம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (09.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்க விலை நிலவரம் 

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20.890 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

இன்றைய ராசிபலன் 09.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ் வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கவலை தரும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவைப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பெண்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் பொறுமை அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாக னத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரு வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும் பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவு கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்களும் தொல்லைகளும் நீங்கும். சிலருக்கு எதிர் பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்க ளில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங் களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கடன் கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமா னவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகவும்.

துலா ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமா னவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதிகப்படியான செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக் கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்தி ருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமை யும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடு வதை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதா யம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற் படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடித்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர் களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்

மலையக தொடருந்து சேவையில் பாதிப்பு!

கொழும்பு – பதுளை மார்க்கத்தில், கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தொடருந்து பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தடை

இதனால் இன்று (08.11.2023) தொடருந்து சேவையில் தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பண்டாரவளை தொடருந்து நிலைய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் வீதிகளுக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

  பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டி , வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

கடிதங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் கடும் சிக்கல்

அங்குள்ள மக்களுக்கு சரியான முகவரி இல்லாத காரணத்தால் நேர்முகத்தேர்வு, நியமனக் கடிதம் போன்ற ஆவணங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளான பலர் தம்மிடம் முறைப்பாடு செய்ததாக தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் ஒரே பெயரில் பலர் உள்ளனர், வீட்டு இலக்கம் இல்லை, முகவரி உள்ளவர்கள் கூட முழு முகவரியை சரியாக பதிவு செய்யாததால், அவர்களுக்கு கடிதங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய தபால் அத்தியட்சகர் ஏ.ஜி. சமன் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்ட இலங்கை பெண்கள்

  சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசா இல்லாமல் தங்கியிருந்த பெண்களே, இலங்கை தூதரகத்தின் மூலம் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

2000 இற்கும் மேற்பட்ட  பெண்கள் காத்திருப்பு

அதேவேளை சுமார் 2000 இற்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்திருந்த நிலையில் 26 பேர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இக்குழு இன்று காலை 07.05 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள் இலங்கைக்கு வருவதற்கான பயணச்சீட்டுகளை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

அதோடு இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து இவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் அபராத தொகை ஆகியவற்றை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குவைத்தில் எஞ்சியிருக்கும் இலங்கை பிரஜைகள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சைகள்!

2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வர்த்தமானி அறிவித்தலின்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசம்பர் மாதம் பரீட்சையை நடத்தவுள்ளது. முதல் வாரத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.