சரிவடைந்த தங்கம்!

  உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய நாளுக்கான (10.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை நிலவரம்

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,780 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாடு திரும்பியது!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. 

 இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வௌியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாகவும், அவர்களின் சதித்திட்டம் காரணமாக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர்  பிரமோத்ய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று தெரிவித்தார்.  

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 02 நாட்களில் பொது ஊடகங்கள் முன் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தபால் வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்தது!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி நேற்று (09) நள்ளிரவுடன் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதுடன், இன்று முதல் வழமை போன்று கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக குவிந்துள்ள சுமார் 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர்  சிந்தக பண்டார தெரிவித்தார்.

இன்றைய ராசிபலன் 10.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ் வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கவலை தரும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவைப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பெண்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் பொறுமை அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாக னத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரு வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும் பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவு கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்களும் தொல்லைகளும் நீங்கும். சிலருக்கு எதிர் பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்க ளில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங் களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கடன் கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமா னவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகவும்.

துலா ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமா னவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதிகப்படியான செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக் கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்தி ருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமை யும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடு வதை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதா யம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற் படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடித்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர் களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்

நாடாளாவிய ரீதியில் மூடப்படுள்ள வைத்தியசாலைகள்!

நாடளாவிய ரீதியில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி போக்கிற்கு செல்லும்

எனவே, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியர்களின் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.  

மிகவும் அரிதான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

  இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு கல்வெட்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை – திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் ஆய்வுக் குழு

தொல்பொருள் திணைக்களத்தின் தலைமையகத்தின் கல்வெட்டுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் இந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை நகலெடுக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வெட்டுப் பிரதி

தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த (26.11.2023) ஆம் திகதி முதல் கல்வெட்டுப் பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்வெட்டு சுமார் 45 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை!

பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி

இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய இனி அனுமதி இல்லை.

வாகனங்களின் தேவை, இடவசதி, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

எனவே சடலங்களை , உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

மூவரின் சடலங்கள்

கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்டவரின் பெயர், வயது , இடம் என எந்த தகவலும் இல்லாத பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி ரு.கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும் , கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த நல்லூராஜ் (வயது 63) ஆகியவர்களின் சடலங்களே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையில் உள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த மருத்துவபீட மாணவர்கள் கைது!

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், டீன்ஸ் வீதி மூடப்பட்டதையடுத்து, மாணவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட அறிவிப்பு!

எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் கருதுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு குறித்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நேற்று (08) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு  சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை மற்றும் பொய்மையை விசாரணை செய்வதற்கு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்குமானால், அது இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.