கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல இடங்களில் மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பரந்தன் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரிசி ஆலைகள், எரிபொருள் நிரப்பு நிலையம், மீன்சந்தை, பழக்கடைகள் மற்றும் தேங்காய் மொத்த விற்பனை நிலையம் ,நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஊடாக உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சினால் நேற்று(08.12.2024) இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

குறித்த சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றறிக்கையில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நிதி வழங்கள் தொடர்பான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள அவர், இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று எச்சரித்துள்ளார்.

சரியான சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் கூறுவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன விலைகளை விளம்பரப்படுத்துவதையும், முன்கூட்டிய கொள்வனவு கட்டளைகளை செய்யுமாறு நுகர்வோரை வற்புறுத்துவதையும் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே தாம் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற விடயங்கள், தற்போது வானங்களை வைத்திருப்போர், தேவையற்ற அச்சத்தில் குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் என்றும், அவசர முடிவுகளை எடுக்க உந்துதலை அளிக்கும் எனவும் மானகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்மை பொறுத்தவரையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகவே தளர்த்தப்படும் என்றும், இதன்படி முதலில் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளும், அதைத் தொடர்ந்து வான்கள் மற்றும் ஏனைய வணிக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

எனினும் இந்த நடைமுறைகளுக்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளோ இன்றுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குறித்த கடற் பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசுவதுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணித்தியாலத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும்.

இதேவேளை, இந்த நிலைமை காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடிகால் ஒன்றில் மீட்க்கப்பட்ட சடலம்!

கேகாலை பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவிசாவளை-கேகாலை பிரதான வீதியின் அரந்தர கெந்த பிரதேசத்திற்கு அரிகில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை கண்டுபிடித்ததோடு, இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 55 வயதுடைய உடுகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், நீதவான் விசாரணைகளுக்காக சடலம் தற்போது கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

64 வயதுடைய துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வரகாபொல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய ராசிபலன்கள் 08.12.2024

மேஷம்

தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீரகள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதி பெருகும்‌. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்‌ வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவிசெய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்டமானநாள்.

துலாம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்‌. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பொறுமை தேவைப்படும் நாள்.

சிறுமி படுகொலை விவகாரம் வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

கம்பஹாவில் சிறுமி கொலை செய்யப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பான பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணையை தொடங்கிய பொலிஸார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.

சிறுமி படுகொலை
முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகேவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தார்.

கடந்த 2ஆம் திகதியன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, ​​காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய பெண் தன் மகள் வீட்டில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார்.

நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் மகள் சுற்றுலா சென்றிருப்பதாகவும், மறுநாள் வருவதாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

5ஆம் திகதி வரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு சிறுமி காணாமல் போனது குறித்து தனது கணவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முறைப்பாட்டாளரின் 42 வயதுடைய கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2ஆம் திகதியன்று கணவன் அடகு வைத்த தங்க நகையை மீட்கமகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி வேலைக்கு சென்றுள்ளார்.

கொலைக்கான காரணம்
போதைக்கு அடிமையான இவர், மகளிடம் நகையை அடகு எடுப்பதற்காக கொடுத்த பணத்தை கேட்டுள்ளார், மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பணத்தை பறித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டிற்கு வந்த அவர், மகள் அடித்த இடத்திலேயே இறந்து கிடப்பதைக் கண்டார்,

இந்நிலையில் சிறுமியின் சடலத்தை பைக்குள் மூடி, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் கழிப்பறை குழியில் வீசியதாக விசாரணையில் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் கிடந்த மகளின் சடலம் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லொஹான் ரத்வத்தவைக்கு மீண்டும் விளக்கமறியல்!

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று(07) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நீர் மின் உற்பத்தி  உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ஏன் மக்களுக்கு அதன் பலனை பெற்றுத் தர முடியாது என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ​​கடந்த ஒக்டோபரில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், அது டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

தற்போதுள்ள நிலவரத்தை பொருத்து மின்கட்டணத்தை அதிக சதவீதத்தில் குறைக்கலாம் என்று குறிப்பிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த முன்மொழிவை நிராகரித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தாமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று மீண்டும் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வினவிய போது, மின்சாரக் கட்டணத்தை திருத்தினால் 1.02% என்ற குறைந்த சதவீதத்தில் செய்யலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை திருத்தாமல் இருப்பதற்கு மேற்கொண்ட யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் பெய்த கனமழையால் நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்திருந்த நிலையில்,  நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.

எவ்வாறாயினும், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் வருடம் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் மற்றுமோர் அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு!

அண்மைய நாட்களாக தொடர்ந்து வந்த காலநிலை மாற்றங்களினால் இலங்கையில் உப்புத் தொழிலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கடும் மழை மற்றும் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருக்குணமலையில் உள்ள குச்சவெளி உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உப்பு உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தனிநபர் உப்பு நுகர்வு

இதேவேளை, உப்பு நுகர்வு மிக அதிகமாக இருக்கும் நாடு இலங்கை ஆகும், கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இலங்கையில் தனிநபர் உப்பு நுகர்வு 11.3 கிராம் ஆகும்.

இவ்வாறனதொரு பின்னணியில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு தேவை என்பது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை. ஆனால் எமது நாட்டில் உப்பின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பு இறக்குமதி

இதன்படி, இலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு 125,000 – 150,000 மெட்ரிக் தொன்களுக்கு இடையில் உள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுமார் இருபதாயிரம் மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.