கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.

இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சாதாரண கடவுச்சீட்டுகளின் அளவு போதுமானதாக இருக்காது என் கருதி இந்த கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு விலைமனு கோரப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம்
எனினும் விலைமனு கோரலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்தை கண்காணிக்க இன்று முதல் ட்ரோன் கேமராக்கள்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் (Drone Cameras) பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு (Colombo) மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டமானது பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்!


  மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

அதேவேளை கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.கடந்த அக்டோபர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி, தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக உள்ளது.

கல்வி அமைச்சு முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்!

இசுறுபாய முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பொரளை – கொட்டாவ 174 பஸ் வீதியின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரஹம்பிட்டிகொடவில் உள்ள கெத்தாராம எனும் புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த உலோக புத்தர் சிலையையே சந்தேகநபர்கள் இவ்வாறு திருடியுள்ளனர்.

மாவனெல்ல தெவனகல, வரலாற்று சிறப்பு மிக்க ரஜமஹா விகாரைக்கு சொந்தமான கரஹம்பிட்டிகொட கெத்தாராம புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நாகையுடன் கூடிய புராதன உலோக புத்தர் சிலையை சிலர் திருடிச் சென்றுள்ளதாக தெவனகல ரஜமஹா விகாரையின் தலைவர் மாதிரிகிரி புக்னசார தேரர் சமீபத்தில் மாவனெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, திருட்டு தொடர்பான விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கிம்புல்விலவத்த தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் 28 வயதுடைய தேரர், கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் மற்றும் பேராதனை கன்னோறுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே விகாரையின் தேரரின் திட்டத்திற்கமைய இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தங்கத்தின் விலையில் இறக்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) குறைவடைந்துள்ளது.

கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,037 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (29) 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட  சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவியை டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி லொஹான் ரத்வத்த, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கார் தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தாக மிரிஹான பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் ஷஷி ரத்வத்தவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களான இருவரையும் டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வினாத்தாளுக்கான தேர்வை மீண்டும் நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமானதல்ல என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தக் கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அதன்பின், மனு மீதான விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு!

யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.

கடந்த 30.11.2024 இரவு 08.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வெள்ள அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரவலாக தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார்
இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி குடிபோதையில் அந்த சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை அந்த சமூக செயற்பாட்டாளர் என்று நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார் அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து அவர்களின் முறைப்பாட்டின் பெயரில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவர் வெட்டிக் கொலை!

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓயாமடுவ – நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஓமந்தை – பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கெப் வண்டியில் வந்த குழுவினர் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன், அவர் பயணித்த கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.